அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் காண்டம் உற்பத்தி தொழிலில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காண்டம் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருட்களாக விளங்கும் ‘சிலிகான் ஆயில்’ மற்றும் ‘அமோனியா’ ஆகியவற்றின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர்.

இது குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலும், கப்பல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாலும் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் விலை உயர்ந்து, விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

இதனால் இந்தியாவில் ஆண்டுக்குச் சுமார் 400 கோடி காண்டம்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக, இவற்றின் உற்பத்திச் செலவு 40 முதல் 50 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சந்தையில் காண்டம்களின் சில்லறை விற்பனை விலை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, மும்பை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் ஏற்கனவே விநியோகப் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்தத் தட்டுப்பாடு நீடித்தால், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் பாலியல் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டு, பொது சுகாதாரத்தில் நீண்டகால சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.