அரபு நாடுகளில் செயல்பட்டு வரும் 18 முன்னணி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஈரானிய இராணுவம் (IRGC) நேரடி மிரட்டல் விடுத்துள்ளது. ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், டெஸ்லா மற்றும் போயிங் உள்ளிட்ட இந்த நிறுவனங்கள், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு உளவுத் தகவல்களை வழங்கியும், செயற்கை நுண்ணறிவு மூலம் தாக்குதல்களைத் திட்டமிட உதவியும் வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால், இந்த நிறுவனங்கள் ஈரான்-அமெரிக்கப் போரில் நேரடியாகப் பங்கேற்பதாகக் கருதும் ஈரான், அவற்றைத் தனது தாக்குதல் இலக்குகளாக அறிவித்துள்ளது.
இன்று (ஏப்ரல் 1) இரவு 8 மணி முதல் இந்த நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று காலக்கெடு விதித்துள்ள ஈரானிய இராணுவம், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உடனடியாக அலுவலகங்களை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.
ஈரான் மீது ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாக இந்தப் பட்டியலில் உள்ள நிறுவனங்களின் கிளைகள் முற்றிலும் அழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பை விட இந்த முறை ஈரான் தெளிவான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
