சந்திரனில் வீடு கட்டி, குடும்பத்துடன் செட்டில் ஆகலாம்னு கனவு காணும் பலருக்கு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஒரு பெரிய ‘ஷாக்’ கொடுத்துள்ளனர். விண்வெளியில் மர்மமான முறையில் விந்தணுக்கள் (Sperm) விசித்திரமாகச் செயல்படுவதால், அங்கு குழந்தை பெற்றுக்கொள்வது என்பது இப்போதைக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது.
பூமி மீது இருக்கும் ஈர்ப்பு விசை (Gravity) தான் விந்தணுக்கள் நேராகச் சென்று அண்டத்தை அடைய உதவுகிறது. ஆனால், ஈர்ப்பு விசை இல்லாத நிலவில் விந்தணுக்கள் திசைமாறி, எங்கு செல்வது என்று தெரியாமல் தத்தளிப்பதாக அடிலெய்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுருக்கமாகச் சொன்னால், அங்கிருக்கும் விந்தணுக்கள் இலக்கை அடைய முடியாமல் வீணாகிவிடுகின்றன.
ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் விந்தணுக்கள் தங்கள் இலக்கை அடைய முடியாமல் அழிந்து போகும் என்பதை 3D Clinostat எனும் நவீன இயந்திரம் மூலம் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். ஏற்கனவே எலிகள் மற்றும் பன்றிகளின் விந்தணுக்களை வைத்துச் செய்த சோதனைகளிலும் இதே முடிவுகள் தான் வந்தன.
இருப்பினும், எதிர்காலத்தில் தொழில்நுட்பம் வளர்ந்தால் ஆரோக்கியமான கருவை உருவாக்குவது சாத்தியமே என்று விஞ்ஞானிகள் ஒரு சிறிய நம்பிக்கையையும் கொடுத்துள்ளனர். எது எப்படியோ, இப்போதைக்கு நிலவில் வம்சத்தை உருவாக்குவது ஒரு தள்ளிப்போகும் கனவாகவே இருக்கிறது.
