மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போரில் ஒரு முக்கிய திருப்பமாக, தனது நட்பு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் போதிய ஒத்துழைப்பு வழங்காத பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள், இனி தற்காப்பு மற்றும் எரிபொருள் தேவைகளுக்கு அமெரிக்காவைச் சார்ந்திருக்கக் கூடாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்கா எப்போதும் உங்கள் பின்னால் இருக்காது; சொந்தமாகப் போராடக் கற்றுக்கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ள டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள ஜெட் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, அந்த நாடுகள் அமெரிக்காவிடமிருந்து எண்ணெயை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம் எனப் புதிய ஆலோசனையை வழங்கியுள்ளார்.

குறிப்பாக, அமெரிக்க ராணுவ விமானங்கள் தனது வான்வெளியில் பறக்க அனுமதி மறுத்த பிரான்ஸ் நாட்டின் செயலை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஈரான் போர் தொடங்கி 32 நாட்களை எட்டியுள்ள நிலையில், இதுவரை சுமார் 3,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் மட்டும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களுக்கு 1,900-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். லெபனானில் 1,200 பேரும், இஸ்ரேலில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கத் தரப்பில் இதுவரை 13 வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஈரானை ராணுவ ரீதியாகப் பலவீனப்படுத்தும் ‘கடினமான பகுதி’ முடிந்துவிட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை அந்தந்த நாடுகளே தங்களது சொந்த பலத்தைக் கொண்டு மீட்க வேண்டும் என்றும், அமெரிக்கா இனி விலகி நின்று வேடிக்கை பார்க்கும் என்றும் அவர் விடுத்துள்ள எச்சரிக்கை ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.