அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தின் போது “நான் அதிபரான நாள் முதல் 24 மணி நேரத்திற்குள் உக்ரைன்-ரஷ்யா போரை முடித்துவிடுவேன்” என உறுதியுடன் தெரிவித்திருந்தார்.

ஆனால், பதவியேற்று 6 மாதங்கள் கடந்தும் போர் நிலை தொடர்வதுடன், போரின் தீவிரமும் அதிகரித்துவருகிறது. புதினுடன் மேற்கொண்ட பல முறை தொலைபேசி பேச்சுவார்த்தைகளும், மூன்றாம் நாடுகளின் மூலம் நடத்திய முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

சமூக வலைதளத்தில் தன் வருத்தத்தை வெளிப்படுத்திய ட்ரம்ப், “புதினுக்கு என்னாயிற்றோ தெரியவில்லை… உக்ரைனிய மக்களை கொன்று குவிக்கிறார்” என கடுமையாக விமர்சித்ததோடு, ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகள் விதிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் அதிபர் மெட்வெடேவ், “மாஸ்கோவிடம் இன்னும் சோவியத் கால அணுசக்தி தாக்குதலுக்கான திறன்கள் உள்ளன” என எச்சரிக்கை தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்க ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ பக்கத்தில், “அவை வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல. அதன் பின்னால் ஆபத்துகள் இருக்கக்கூடும் என்பதால், இரண்டு அணுசக்தி இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை தேவையான பகுதிகளில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்திருக்கிறார். இதனால், அமெரிக்கா–ரஷ்யா இடையிலான பதற்றம் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளதைக் காட்டுகிறது.

இரு அணு சக்திகளின் பலத்தை ஒப்பிட்டால், உலகில் உள்ள மொத்த அணு ஆயுதங்களில் 87% வீதம் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் தான் சொந்தம். 2025 ஆம் ஆண்டு ஆய்வு படி, ஒன்பது நாடுகள் மொத்தம் 12,241 அணு ஆயுதங்களை கொண்டுள்ளன. இதில், அமெரிக்க கடற்படைக்கு 71 அணுசக்தி இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன – இது உலகில் மிகப்பெரிய நீர்மூழ்கிப் படையாகும்.

ரஷ்யாவிடம் இதற்கும் பாதியாக 30 கப்பல்களே உள்ளன. இதற்கிடையே, ட்ரம்ப் விதித்த “புதின் 14 நாளில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்” என்ற கடைசி காலக்கெடு இவ்வாரத்துடன் முடிகிறது. ட்ரம்ப் பல நாடுகளில் பூரண அமைதியை கொண்டு வந்தவர் எனக் கூறப்படுகிறது. ஆனால் இப்போதும் அவர் சொல் புதினிடம் எடுபடுமா என்பது உலகம் முழுக்க கவனிக்கப்படும் விவகாரமாக உள்ளது