ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் உள்ள ‘எல் பிராட்’ (El Prat) சர்வதேச விமான நிலையத்தில், பாஸ்போர்ட் காலாவதியானதை காரணமாகக் கூறி தங்களது 10 வயது மகனை விமான நிலையத்தில் விட்டு சென்ற ஒரு தம்பதியர் மீது தற்போது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விமான நிலைய ஊழியராக உள்ள லிலியன் என்ற பெண், டிக்டாக் வீடியோ ஒன்றில் இந்த தம்பதியரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த பிறகு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தற்போது அந்த வீடியோவுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்தது.
அந்த சிறுவனின் பாஸ்போர்ட் காலாவதியாகியதோடு, அவனுக்கு தேவையான விசாவும் இல்லை என்பதால் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், பெற்றோர் விமான டிக்கெட் வீணாகிவிடும் என்று பயந்து, தனது மகனை விமான நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு விமானத்தில் ஏறி தங்கள் தாயகத்திற்கு செல்ல தயாராக இருந்தனர்
விமான நிலையம் அருகிலுள்ள கார் பார்கிங்கில் தனியாக சுற்றி கொண்டிருந்த சிறுவனை போலீசார் கண்டுபிடித்தனர். இது குறித்து விமான நிலையக் கட்டுப்பாட்டு அலுவலராகப் பணியாற்றும் லிலியன் கூறும்போது, “நான் பல விஷயங்களை பார்த்திருக்கிறேன். ஆனால், இதுபோன்ற செயலை பார்த்ததில்லை. குழந்தையை விட்டுவிட்டுப் பயணிக்க பெற்றோர்களுக்கு எப்படி மனம் வந்தது?” எனக் கூறி அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
விமானம் புறப்படுவதற்கு முன் பைலட்டுடன் தொடர்பு கொண்டு விஷயத்தை கூறி பெற்றோரின் பயண பைகள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டன. போலீசார் அந்த தம்பதியரை தேடி கண்டுபிடித்து, அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பெற்றோர்களுடன் மற்றொரு சிறு குழந்தையும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெற்றோர் பொறுப்பின்மையை எடுத்துக்காட்டுகிறது என விமான நிலையத்தினரும், சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
