கோவாவின் பஞ்சிம் பகுதியில் உள்ள ‘ஃபொன்டைன்ஹாஸ்’ அதன் வண்ணமயமான பாரம்பரிய வீடுகளுக்குப் பெயர் பெற்றது. சமீபகாலமாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அங்கிருக்கும் வீடுகளின் வாசல்களில் அமர்ந்து கொண்டு ரீல்ஸ் எடுப்பது, செடிகளை நகர்த்தி வைப்பது மற்றும் வீட்டின் உரிமையாளர்களின் அனுமதியின்றி அத்துமீறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அன்கித் வேங்குர்லேகர் என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் வெளியிட்ட வீடியோ, இணையத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், “போட்டோ எடுக்க அனுமதியில்லை” என எச்சரிக்கை பலகை இருந்தும், அதைச் சட்டை செய்யாமல் சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுப்பதைப் பார்க்க முடிகிறது.
இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு தரப்பினர், “சொந்த வீட்டில் இருப்பவர்களின் தனிமை பாதிக்கப்படுகிறது, சுற்றுலாப் பயணிகள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று உள்ளூர் மக்களுக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். மறுபுறம் சிலர், “சுற்றுலாப் பயணிகள் வருவதால் தான் அங்குள்ள கடைகளுக்கும் கஃபேக்களுக்கும் வருமானம் கிடைக்கிறது, அப்படி இருக்கும்போது புகைப்படம் எடுக்கத் தடை விதிப்பது முறை அல்ல” என்று வாதிடுகின்றனர். சினிமா ஷூட்டிங் நடக்கும்போது மட்டும் அனுமதி கொடுக்கும் மக்கள், சாதாரண பொதுமக்களைத் தடுப்பது ஏன் என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
