இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில், அமெரிக்க அணி இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு, அந்த அணிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான போட்டி கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 7) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அமெரிக்கா தோல்வியடைந்த சுமார் 24 மணி நேரத்திற்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை இரவு அதிபர் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்தியாவில் கிரிக்கெட் உலகக் கோப்பை நடப்பதாக இப்போதுதான் கேள்விப்பட்டேன். அமெரிக்க அணிக்கு எனது வாழ்த்துகள். நமது அணி மிகவும் வலிமையானது. அமெரிக்கா உங்களுடன் இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார். மேலும், அமெரிக்க அணியினருடன் ஐசிசி தலைவர் ஜெய் ஷா இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் போட்டியின் முடிவு தெரிந்த பிறகு அவர் ‘குட் லக்’ சொன்னது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
முன்னதாக நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அமெரிக்க பந்துவீச்சாளர் வான் ஷால்க்விக் (4 விக்கெட்) அபாரமாகப் பந்துவீச, இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருகட்டத்தில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்த இந்தியாவை, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீட்டார். அதிரடியாக விளையாடிய அவர் 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்து, இந்தியாவை 161 ரன்கள் எட்ட உதவினார்.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அமெரிக்க அணியின் பேட்டிங்கை முகமது சிராஜ் நிலைகுலையச் செய்தார். சிராஜ் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அமெரிக்க வீரர்களான மிலிந்த் குமார், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, சுபம் ரஞ்சனே ஆகியோர் போராடிய போதிலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர். இறுதியில், அமெரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து, 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
மேலும் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபரின் இந்தப் பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நகைச்சுவையான விமர்சனங்களையும், அதே நேரத்தில் அமெரிக்காவில் கிரிக்கெட் வளர்ந்து வருவதற்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
