நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நடந்த சம்பவங்கள் இந்தியத் தேர்வுக் குழுவையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. காயமடைந்த திலக் வர்மாவுக்குப் பதிலாகக் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட இஷான் கிஷன், வெறும் 32 பந்துகளில் 76 ரன்களை விளாசி அதிரடி காட்டினார். ஆனால், அணியின் முதல் விருப்பமான விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், முதல் போட்டியில் 10 ரன்களும், இரண்டாவது போட்டியில் வெறும் 6 ரன்களும் எடுத்து ஏமாற்றம் அளித்ததுதான் இப்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது.
சஞ்சு சாம்சனின் இந்த ஆட்டத்தை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இரண்டாவது போட்டியில் ஒருமுறை கேட்ச் கைவிடப்பட்ட பிறகும், அடுத்த சில பந்துகளிலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தது சஞ்சுவின் பேராசையையே காட்டுகிறது என்று அவர் சாடியுள்ளார். தன்னிடம் திறமை இருந்தும், ஒரு ரன்-மெஷினாக மாறாமல் அவசரப்பட்டு விக்கெட்டை இழப்பது சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கைக்கே ஆபத்தாக முடியும் என்றும், இஷான் கிஷனின் அதிரடி ஃபார்ம் சஞ்சுவுக்குப் பயத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் சீக்கா எச்சரித்துள்ளார்.
தற்போது திலக் வர்மா மீண்டும் அணிக்குத் திரும்பும்போது யாரை வெளியேற்றுவது என்ற ‘இடியாப்ப சிக்கல்’ பிசிசிஐ-க்கு உருவாகியுள்ளது. விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் இஷான் கிஷன் மிரட்டுவதால், சஞ்சு சாம்சன் தனது இடத்தை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அடுத்த இரண்டு போட்டிகளில் சஞ்சு தன்னை நிரூபிக்கத் தவறினால், வரவிருக்கும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் அவர் களமிறங்குவது கடினம் என்றும், பெஞ்சில் அமர வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
