மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில், உயிரிழந்த ஒரு பெண்ணின் சடலத்தைக் குப்பை வண்டியில் ஏற்றிச் சென்ற சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே தலைகுனிய வைத்துள்ளது. இந்தர்கர் பகுதியில் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சுற்றித் திரிந்துள்ளார். பசி மற்றும் கடும் குளிரால் அந்தப் பெண் சாலையோரம் உயிரிழந்து கிடந்ததைக் கண்ட மக்கள், சுகாதாரத் துறைக்கும் நகராட்சிக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், பலமுறை போன் செய்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை.
நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு குப்பை வண்டியை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். வேறு வழியின்றி அங்கிருந்த சமூக ஆர்வலர்களே அந்தப் பெண்ணின் உடலை குப்பை வண்டியில் ஏற்ற வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. அங்கேயும் கொடுமை முடிந்துவிடவில்லை. உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு அந்தப் பெண்ணின் உடலை அடக்கம் செய்யும்போது, முறையான சடங்குகள் எதுவுமின்றி ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி, அதே இயந்திரத்தைக் கொண்டே மண்ணை அள்ளிப் போட்டு மூடியுள்ளனர்.
#WATCH | MP: Woman’s Body Carried In Garbage Vehicle In Datia, Triggers Outrage#MadhyaPradesh #MPNews #Datia pic.twitter.com/FYXwf2WC44
— Free Press Madhya Pradesh (@FreePressMP) February 7, 2026
இதைப் பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டு கொந்தளித்து வருகின்றனர். இதேபோல் கட்னி மாவட்டத்திலும் அடையாளம் தெரியாத ஒரு நபரின் சடலத்தை இரும்பு கம்பியால் இழுத்து குப்பை டிராக்டரில் ஏற்றிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து நடக்கும் இத்தகைய சம்பவங்கள், அரசு நிர்வாகத்தின் மெத்தனத்தையும், மனிதநேயம் செத்துப்போனதையும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
