தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரொக்கப் பணமும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2,500 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அதைவிடக் கூடுதலாக 3,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை இந்த ஆண்டு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு பரிசாக வெளியிடுவார் எனத் தெரிகிறது.

இந்த பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கும் திட்டம், வருமான வரி செலுத்துவோர் மற்றும் அரசு ஊழியர்கள் தவிர்ந்த சுமார் 1 கோடியே 10 லட்சம் தகுதியுள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு சென்றடையும். இதற்கான டோக்கன்கள் ஜனவரி முதல் வாரத்தில் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டு, இரண்டாவது வாரத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு வழங்கப்படும்.

கடந்த ஆண்டு ரொக்கப் பணம் வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டு பெரிய தொகையாகக் கிடைக்கும் என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.