பீகார் மாநிலம் பூர்ணியா  பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரும், பி.எச்.டி (PhD) ஆராய்ச்சி மாணவி ஒருவரும் உணவகம் ஒன்றில் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் முறைப்படியான ஒழுங்குமுறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் 8, புதன்கிழமை அன்று எக்ஸ் (X) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று காட்டுத்தீயாகப் பரவியது. பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ‘ உணவகத்தில் அந்தப் பேராசிரியரும், மாணவியும் அமர்ந்துள்ளனர். இருவரும் ஒரே தட்டில் உணவு உண்பது போலவும், மிகவும் சகஜமாக சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது போலவும் அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் சில புகைப்படங்களில், அந்த மாணவி பேராசிரியரின் மடியில் கை வைத்திருப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இது ஆசிரியர் – மாணவர் இடையேயான புனிதமான உறவை மீறும் செயல் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் அமைப்புகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டன. புதன்கிழமை காலை துணைவேந்தரின் வாகனத்தை முற்றுகையிட்ட மாணவர்கள், சம்பந்தப்பட்ட பேராசிரியரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

“ஆராய்ச்சி மாணவர்களுக்கும் அவர்களது வழிகாட்டிகளுக்கும் இடையே இத்தகைய நெருக்கம் இருப்பது, கல்விச் சூழலில் ஒருதலைப்பட்சமான போக்கையும், முறையற்ற அழுத்தங்களையும் உருவாக்கும்” என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். நிர்வாகத் தரப்பில் எழுத்துப்பூர்வமான உறுதிமொழி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து துணைவேந்தர் பேராசிரியர் விவேகானந்த் சிங் கூறுகையில், “பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒழுங்குமுறை குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

பல்கலைக்கழக புரோக்டர் டாக்டர் உதய நாராயண் சிங் கூறுகையில், “வைரலான வீடியோ மற்றும் புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக நடத்தை விதிகள் மீறப்பட்டிருப்பது உறுதியானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே பல்வேறு நிர்வாகச் சிக்கல்களைச் சந்தித்து வரும் பூர்ணியா பல்கலைக்கழகத்திற்கு, இந்தச் சம்பவம் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. உயர் கல்வியில் ஆசிரியர் – மாணவர் இடையேயான தொழில்முறை நெறிமுறைகள் மற்றும் எல்லைகள் குறித்து பீகார் கல்வி வட்டாரத்தில் இந்த விவகாரம் ஒரு விவாதத்தையே கிளப்பியுள்ளது.