நண்பனின் மனைவி மீது கொண்ட ஆசையாலும், குடும்பத் தகராறைக் காரணங்காட்டியும் கூலித் தொழிலாளியைக் கழுத்தறுத்துக் கொன்று, உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி வீசிச் சென்ற நண்பனைப் போலீசார் கைது செய்தனர். அதாவது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனில் நாயக். இவர் தனது மனைவி புஷ்பாவுடன் பெங்களூரு அருகே உள்ள பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கடந்த மார்ச் 25-ஆம் தேதி மதிய உணவிற்குப் பிறகு வேலைக்குச் சென்ற சுனில் நாயக், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனால் பதற்றமடைந்த புஷ்பா, வீட்டு உரிமையாளர் ஆனந்த் மற்றும் உறவினர்களுடன் இணைந்து சுனிலைத் தேடினார். இதற்கிடையில்  ஒரு மதுக்கடை அருகே காலியாக இருந்த இடத்தில் கிடந்த சந்தேகத்திற்கிடமான சாக்கு மூட்டையை அங்கிருந்தவர்கள் பிரித்துப் பார்த்தனர். அதில் சுனில் நாயக் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், சுனில் நாயக்கின் நண்பரான மாலிக் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது கொலையை ஒப்புக்கொண்ட அவர், பின்வரும் அதிர்ச்சித் தகவல்களை அளித்தார். அதாவது சுனில் மற்றும் மாலிக் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், மாலிக் அடிக்கடி சுனில் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். அப்போது சுனிலின் மனைவி புஷ்பா மீது மாலிக் மோகம் கொண்டுள்ளார். புஷ்பாவை அடைய சுனில் இடையூறாக இருப்பார் என அவர் கருதியுள்ளார்.

இதற்கிடையில், சுனில் நாயக் மதுபோதையில் தனது மனைவியை அடிக்கடி அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து புஷ்பா தனது கணவரின் நண்பரான மாலிக்கிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இதையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட மாலிக், புஷ்பா மீது இருந்த ஆசையினால் சுனிலை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு, சுனிலை மது அருந்த அழைத்துச் சென்ற மாலிக், போதையில் இருந்த சுனிலின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி மறைவான இடத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால், மக்கள் நடமாட்டம் இருந்ததால் மதுக்கடை அருகிலேயே மூட்டையை வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொலையில் சுனிலின் மனைவி புஷ்பாவிற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நண்பனே மனைவியைக் கவர நண்பனைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.