மும்பையின் போவாய் பகுதியில் உள்ள ஆறு படுக்கை அறைகள் கொண்ட ஆடம்பர வில்லா ஒன்றின் விலை ரூபாய் 8.5 கோடியில் இருந்து ரூபாய் 5 கோடியாகக் குறைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் விலைக் குறைப்பைக் கண்டு வியப்படைந்த பயனர்கள், விலை குறைக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்று ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். பல பயனர்கள் அந்த வீடு “பேய் பங்களா”வாக இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
‘மேட்ச் ஸ்கொயர்ஸ்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான அந்த வீடியோவில், பழங்கால பாணியில் வெள்ளைத் நிறத்தில் காணப்படும் அந்த வில்லாவில் அகலமான வரவேற்பறை, பெரிய வெளிப்புறத் தோட்டம், மற்றும் மிகப்பெரிய சமையலறை ஆகியவை உள்ளன. வீட்டைக் காண்பிக்கும் நபர், அந்த வில்லா நீண்ட காலமாகப் பூட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தாலும், அதற்கான குறிப்பிட்ட காரணத்தைக் கூறவில்லை.
View this post on Instagram
சந்தேகத்தை உருவாக்கியுள்ள விலைக் குறைப்பு குறித்து சமூக வலைதளப் பயனர்கள் பலரும் சந்தேகத்துடன் கருத்துத் தெரிவித்துள்ளனர். “விலை மூன்று கோடி குறைந்திருந்தால், நிச்சயம் ஏதோ மோசமான வரலாறு இருக்கும்; பேய் உள்ளதா?” என்று ஒருவர் கருத்திட்டுள்ளார். மற்றொருவர், “விலை இவ்வளவு குறைந்தது ஏன்? கண்டிப்பாக ஏதோ சந்தேகம் இருக்கு” என்றும், இன்னொருவர், “இது பங்களா இல்லை; பேய் பங்களா போலத் தெரிகிறது” என்றும் பதிவிட்டுள்ளனர்.
போவாய் போன்ற பகுதிகளில் இவ்வளவு விலைக் குறைப்பு அசாதாரணமானது என்று மற்றொரு பயனர் சுட்டிக்காட்டியுள்ளார். 99 ஏக்கர்ஸ் தகவலின்படி, போவாய் பகுதியில் சராசரி சதுர அடிக்கு ரூபாய் 38,000க்கு மேல் விற்பனையாவதாகவும், அப்பகுதியில் உள்ள மற்ற நான்கு படுக்கையறை வில்லாக்கள் சுமார் ரூபாய் 9.5 கோடி வரையிலும், மூன்று படுக்கையறை பங்களாக்கள் ரூபாய் 7.5 கோடியில் இருந்து ரூபாய் 10 கோடி வரை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த விலைக் குறைப்பு மிகுந்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
