மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு உயர்குடி குடியிருப்புப் பகுதியில், 75 வயதான ஓய்வுபெற்ற வழக்கறிஞர் ஒருவர், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமி ஒரு பாதுகாப்புப் படை அதிகாரியின் மகள் என்பதும், வழக்கறிஞரின் பேத்தியுடன் விளையாடுவதற்காக அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்வது வழக்கம் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விளையாடச் சென்ற சிறுமி அழுதபடி வீடு திரும்பியபோது, “அம்மா எனக்கு ரொம்ப வலிக்குது” என்று கூறியதைத் தொடர்ந்து, பெற்றோர் விசாரித்தபோது இக்கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் ஹபிப்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக முயன்ற அந்த 75 வயது வழக்கறிஞரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மனிதநேயமற்ற இந்தச் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுப்படுத்தியுள்ளது.
