நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி பங்கேற்கத் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை “அடாவடித்தனமானது” எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாகப் பதிலளிக்க எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) வேட்பாளர் சீனிவாச சேதுபதி, தி.மு.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஆர். பெரியகருப்பனை விட வெறும் 1 வாக்கு கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை எதிர்த்தும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறியும் கே.ஆர். பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும். அதுவரை சீனிவாச சேதுபதி சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இன்று நடைபெறவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சீனிவாச சேதுபதி பங்கேற்க இடைக்காலத் தடை விதித்ததுடன், வழக்கை ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சீனிவாச சேதுபதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சஞ்சீவ் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்ததாவது, “தேர்தலில் வெற்றி பெற்று முறைப்படி அறிவிக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி, சபையில் வாக்களிக்கத் தடை விதித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவு விந்தையாக உள்ளது. எந்த அடிப்படையில் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது? இது ஒரு ‘அடாவடித்தனமான’ (High-handed) விஷயம். இத்தகைய உத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் சீனிவாச சேதுபதி பங்கேற்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் உடனடியாக இடைக்காலத் தடை விதித்தது. இதன் மூலம் அவர் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்தத் தேர்தல் வழக்கு தொடர்பான இதர நடவடிக்கைகளுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கே.ஆர். பெரியகருப்பன் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் இது குறித்து விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த அதிரடி உத்தரவின் மூலம், திருப்பத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.