அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய அணியின் அதிரடி வீரர் இஷான் கிஷன் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். நியூசிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் வெறும் 25 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் குவித்து இந்திய அணியின் ஸ்கோர் 255-ஐ எட்ட முக்கியக் காரணமாக இருந்தார். சஞ்சு சாம்சனுடன் இணைந்து இவர் அமைத்த 105 ரன் பார்ட்னர்ஷிப் நியூசிலாந்து அணியை நிலைகுலையச் செய்தது.

​இந்தியா வெற்றியின் விளிம்பில் இருந்தபோது, அகமதாபாத் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் இஷான் கிஷனை பந்து வீசச் சொல்லி (Bowling) கோஷமிட்டு ஒரு விசித்திரமான கோரிக்கையை வைத்தனர். ஆனால், அவரது பந்துவீச்சை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைக்கவில்லை. இந்தத் தொடர் முழுவதும் 317 ரன்கள் குவித்து, இந்தியாவின் இரண்டாவது அதிகபட்ச ரன் எடுத்த வீரராகத் திகழ்ந்தார். இரண்டு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு அணிக்குள் நுழைந்து, இப்போது உலகக்கோப்பையையே கையில் ஏந்தியுள்ள இஷான் கிஷனின் இந்த ‘கம்பேக்’ பலருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது.