ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகோபால் (40), உத்தரகாண்ட் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தைச் சேர்ந்த ஜெர்மின் (36) என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 14 வயது மகளும் 10 வயது மகனும் உள்ளனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக கணவன்-மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஜெர்மின், ஜீவனாம்சம் கோரி முதுகுளத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி இரவு ஜெர்மின் தனது மகள் மற்றும் மகனுடன் உணவுடன் அமர்ந்திருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த இருவர் பயங்கர ஆயுதங்களால் அவரை குழந்தைகள் கண்முன் வெட்டிக்கொலை செய்தனர். சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலத்தில் பணியாற்றிய விஜயகோபாலை கைது செய்து தீவிரமாக விசாரித்தனர்.

விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. “நான் கட்டிய வீட்டை ஜெர்மின் அபகரிக்க முயன்றதால் ஆத்திரமடைந்தேன். இதனால் கன்னிராஜபுரத்தை சேர்ந்த சங்கரை தொடர்பு கொண்டு, அவரது ஏற்பாட்டில் 5 பேர் கூலிப்படையாக செயல்பட்டனர். சம்பவத்தன்று இரவில் 2 பேர் வீட்டுக்குள் நுழைந்து கொலை செய்தனர்,” என விஜயகோபால் வாக்குமூலம் அளித்துள்ளார். இது போலிசாரால் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து ஜெர்மின் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கணவர் விஜயகோபாலை தொடர்ந்து, முக்கிய திட்டமிடலாளரான சங்கர் உள்பட மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் கொலை சம்பவத்தில் நேரடியாக தொடர்புடையவர்களாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், அவர்களிடம் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.