விளையாடிக்கொண்டிருந்த போது மூன்றரை வயது குழந்தையின் தலை அலுமினியப் பாத்திரத்திற்குள் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், மருத்துவர் மற்றும் பிளம்பரின் துரித நடவடிக்கையால் அந்த குழந்தை மறுபிறவி எடுத்துள்ளது.

அதாவது மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுவன், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது அங்கிருந்த ஒரு சிறிய அலுமினியப் பாத்திரத்தைத் தலையில் கவிழ்த்துள்ளான். எதிர்பாராதவிதமாக அந்தப் பாத்திரம் குழந்தையின் கழுத்து வரை இறங்கி மிகவும் இறுக்கமாகச் சிக்கிக்கொண்டது.

இதனால் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, முகம் சிவக்கத் தொடங்கியது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல மருத்துவமனைகளுக்கு அலைந்தனர். ஆனால், பாத்திரத்தை அகற்ற முயன்றால் குழந்தையின் கழுத்தில் பலத்த காயம் ஏற்படும் என அஞ்சிய பல மருத்துவர்கள் கைவிரித்தனர்.

இறுதியாக ஜல்கானில் உள்ள சஹாரா மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு வரப்பட்டது. அங்குள்ள டாக்டர் மின்ஹாஜ் படேல், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். அறுவை சிகிச்சை உபகரணங்களுக்குப் பதிலாக, ஒரு பிளம்பரை (குழாய் சரி செய்பவர்) வரவழைத்து, அவர் பயன்படுத்தும் மின்சாரக் கட்டர்மூலம் பாத்திரத்தை வெட்டத் திட்டமிட்டார்.

மருத்துவரின் வழிகாட்டுதலின்படி, பிளம்பர் மிகவும் கவனமாக அலுமினியப் பாத்திரத்தை வெட்டத் தொடங்கினார். குழந்தையின் தலையில் சிறு கீறல் கூட விழாதவாறு மிகவும் துல்லியமாகச் செயல்பட்டனர். சுமார் 12 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு பாத்திரம் வெற்றிகரமாக இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு அகற்றப்பட்டது.

மேலும் தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மீட்பு நடவடிக்கையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மருத்துவர் மற்றும் பிளம்பரின் சமயோசித புத்தியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.