பிரபல நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் 12 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ‘ஃபார்முலா’ பால் பவுடர்களில் நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, ஐரோப்பிய நாடுகளில் அந்தப் பொருட்கள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.

குழந்தை உணவுச் சந்தையில் முன்னணியில் உள்ள நெஸ்லே நிறுவனம், தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கப்படும் சத்தான உணவாக தனது ‘ஃபார்முலா’ பால் பவுடர்களை விற்று வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட குறிப்பிட்ட தொகுதி (Batch) பால் பவுடர்களை அந்நிறுவனம் திடீரென திரும்பப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக நெஸ்லே நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

“குழந்தை பால் பவுடர் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட ஒரு மூலப்பொருள், நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை. இந்த குறிப்பிட்ட தயாரிப்புகளை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு குமட்டல், வாந்தி மற்றும் கடுமையான செரிமானச் சிக்கல்கள் ஏற்படக்கூடிய நச்சுப்பொருள் (Contaminant) கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.”

கடந்த டிசம்பர் மாதமே இந்த பால் பொருட்களில் நச்சுப் பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது சந்தையிலிருந்து அந்தப் பொருட்கள் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இந்தப் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள், அவற்றை குழந்தைகளுக்குப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாங்கிய பொருட்களை விற்பனை மையங்களிலேயே திருப்பி அளித்துவிட்டு, அதற்கான முழுத்தொகையையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழந்தை உணவில் நச்சுத்தன்மை கண்டறியப்பட்ட இந்தச் சம்பவம், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.