ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் தனித்துவமான நடிப்பால் பிரபலமான நடிகர் ஃபிஷ் வெங்கட் (53) காலமானார்.

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஹைதராபாத்தின் சந்தன்நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில வாரங்களாக நிலை மோசமாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

மீன் வெங்கட் என பரிச்சயமான இவரது இயற்பெயர் மங்கலம்பள்ளி வெங்கடேஷ். முன்பாக முஷீராபாத் சந்தையில் மீன் விற்பனையாளர் இருந்ததால், ‘ஃபிஷ் வெங்கட்’ என்ற புனைபெயர் பரவலாக பயன்படுத்தப்பட்டது. 2000 ஆம் ஆண்டு “சம்மக்கா சரக்கா” திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், குஷி, பன்னி, தில், யோகி, ராச்சா, கப்பர் சிங் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனை விட பார்வையாளர்களை கவர்ந்த பங்களிப்பை வழங்கியவர்.

சமீபத்தில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால், வெங்கட் டயாலிசிஸில் உயிர் நீடித்து வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், அவரது மகள் ₹50 லட்சம் தேவைப்படும் இந்த சிகிச்சைக்கு பொதுமக்களிடம் நிதி சேகரித்திருந்தார். ஆனால், மருத்துவர்களின் முயற்சிகள் பலனளிக்காமல் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி, இறுதியில் உயிர் பிரிந்தார்.

அவரது மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். உணர்ச்சி, நகைச்சுவை மற்றும் வித்தியாசமான பேச்சுப்பாங்கால் மக்கள் மனதில் இடம்பிடித்த ஃபிஷ் வெங்கட், இழப்பே தீராத வலி  என திரையுலகினர் வருத்தத்தில் உள்ளனர்.