மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்று உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது இங்கிலாந்து அணி.
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய கேப்டன் ஹாரி புரூக், தனது அணியின் தோல்விக்கான முக்கிய காரணத்தை ஓப்பனாக ஒப்புக்கொண்டார். “கிரிக்கெட்டில் கேட்சுகள் தான் போட்டியைத் தீர்மானிக்கும். சஞ்சு சாம்சன் கொடுத்த கேட்சை நான் தவறவிட்டது தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது.
அந்த ஒரு தவறுக்கு நாங்கள் இன்று பெரிய விலையைக் கொடுத்துள்ளோம்” என வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும், ஆடுகளம் முதலில் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் எனத் தவறாகக் கணித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
இந்திய பேட்ஸ்மேன்களைப் பாராட்டிய அவர், “அவர்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள்; சிறிய தவறு செய்தாலும் பந்தை எல்லைக்கோட்டிற்கு அப்பால் அனுப்பிவிடுகிறார்கள்” என்றார். அதே சமயம், 105 ரன்கள் குவித்து இங்கிலாந்தை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்ற இளம் வீரர் ஜேக்கப் பெத்தேலை புகழ்ந்து தள்ளினார். “பெத்தேலின் ஆட்டம் எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய நம்பிக்கை; அவர் இங்கிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலத் தூண்” எனப் பெருமிதம் கொண்டார்.
254 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கடைசி வரை போராடிய தனது வீரர்களின் மன உறுதியைப் பாராட்டிய புரூக், வெற்றி பெறாவிட்டாலும் தங்களின் போராட்ட குணத்தை நினைத்துப் பெருமைப்படுவதாகக் கூறி விடைபெற்றார்.
