மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், 42 பந்துகளில் 89 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட சஞ்சு சாம்சன், ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும், இந்த வெற்றிக்கான முழுப் பெருமையும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவையே சாரும் என அவர் தெரிவித்துள்ளார். “பும்ரா போன்ற பந்துவீச்சாளர்கள் தலைமுறைக்கு ஒருமுறை தான் பிறப்பார்கள்; கடைசி ஓவர்களில் அவர் ரன்களைக் கட்டுப்படுத்திய விதம் தான் எங்களை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றது. எனவே, இந்த விருது அவருக்கே சேர வேண்டும்” என சஞ்சு பெருந்தன்மையுடன் கூறினார்.

தொடர்ந்து பேசிய சஞ்சு, “எனது தனிப்பட்ட சதத்தை விட அணியின் வெற்றியே முக்கியம்; 250 ரன்கள் எடுத்தால் மட்டுமே இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என எங்களுக்குத் தெரியும்” என்றார். டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா, சஞ்சுவின் 89 ரன்கள் மற்றும் ஷிவம் துபே, இஷான் கிஷன் ஆகியோரின் அதிரடியால் 253 ரன்களைக் குவித்தது.

இமாலய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்து நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டது. பும்ரா தனது 4 ஓவர்களில் வெறும் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு முக்கிய விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவிற்குத் த்ரில் வெற்றியைத் தேடித்தந்தார். வரும் மார்ச் 8-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.