தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த தமிழகத்திலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் விஜய் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தற்போது வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பனையூரில் நடைபெற்ற தவெக வேட்பாளர் தேர்வு நேர்காணலின் போது, பெரம்பூர் தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பேசிய விஜய், “பெரம்பூருக்கு விரைவில் வருவேன்” எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இது அவர் அந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கான பச்சைக்கொடி என்றே அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். மேலும், தேர்தலில் நிற்கும் ஒவ்வொரு வேட்பாளரும் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்றும், தேர்தலுக்குக் குறைவான காலமே உள்ளதால் இரவு பகலாகக் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

விஜய்யின் இந்தத் திடீர் ‘பெரம்பூர்’ மூவ், அந்தத் தொகுதியின் தற்போதைய அரசியல் கணக்குகளை அப்படியே தலைகீழாக மாற்றியுள்ளது.