தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் தேர்வினை மிகத் தீவிரமாகத் தொடங்கியுள்ளார். இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முதற்கட்ட நேர்காணலில், சுமார் 60 வேட்பாளர்களிடம் விஜய் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தனது அரசியல் பயணம் குறித்து மிக உருக்கமாகப் பேசிய அவர், “நான் சினிமாவில் சம்பாதித்த புகழ், பணம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டுத்தான் மக்களுக்காக அரசியலுக்கு வந்திருக்கிறேன். இனி எனக்கு அரசியலைத் தவிர வேறு எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.
அரசியலுக்கு வந்த பிறகு தனக்குக் கொடுக்கப்படும் நெருக்கடிகள் மற்றும் சவால்கள் குறித்துக் குறிப்பிட்ட விஜய், “எனக்கு என்னவெல்லாம் நடந்தது என்பது உங்களுக்கே தெரியும்; எதற்கும் அஞ்சாமல் துணிந்து களப்பணிகளைச் செய்யுங்கள்” என்று வேட்பாளர்களுக்குத் தைரியம் அளித்துள்ளார்.
ஒரு தொகுதிக்கு மூன்று பேர் வீதம் அழைத்து நடத்தப்பட்ட இந்த நேர்காணலில், பூத் கமிட்டி அமைப்பது மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விஜய் நேரடியாகக் கேட்டறிந்தார்.
தன் மீது நம்பிக்கை வைத்து களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்றும், அதற்குத் தேவையான கடின உழைப்பை இப்போதே தொடங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டணிக் குழப்பங்கள் மற்றும் தனிப்பட்ட விமர்சனங்களுக்கு மத்தியில் விஜய்யின் இந்த ‘நேரடி ஆக்ஷன்’, தவெக தொண்டர்களிடையே பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
