டென்மார்க் நாட்டின் சுயாட்சிப் பிராந்தியமான கிரீன்லாந்தை வாங்குவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தீவிரம் காட்டி வரும் நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள ஒரு வினோதமான புகைப்படம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதைத் தடுக்கவும், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கிரீன்லாந்து தங்களுக்கு அவசியம் என்று டிரம்ப் கருதுகிறார். இதனால், அந்தப் பகுதியைத் தங்களிடம் தருமாறு  டென்மார்க்கை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்கு டென்மார்க் மற்றும் நேட்டோ நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், டிரம்ப் தனது பிடியில் உறுதியாக உள்ளார்.

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்கக் கொடியுடன் செல்லும் ஒரு பென்குயினைத் தழுவியபடி, டிரம்ப் கிரீன்லாந்து நோக்கி நடந்து செல்கிறார். தூரத்தில் கிரீன்லாந்து கொடி பறப்பது போலவும் அந்தப் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. “பென்குயினைத் தழுவுங்கள்” என்று அதற்குத் தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில் பென்குயின் காட்டப்படுவதற்கு ஒரு சுவாரசியமான பின்னணி உள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆவணப்படத்தில், ஒரு பென்குயின் தனது கூட்டத்தை விட்டுப் பிரிந்து, உணவு இல்லாத மலைப்பகுதியை நோக்கித் தனியாகச் செல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது. மற்ற பென்குயின்கள் வாழ்வாதாரத்திற்காகக் கடலை நோக்கிச் செல்லும்போது, அந்த ஒரு பென்குயின் மட்டும் யாருமே செல்லாத திசையை நோக்கிச் செல்வது பலராலும் பலவிதமாக விமர்சிக்கப்பட்டது: சிலர் இதனை அமைதியான எதிர்ப்பு என்றும், சிலர் உலகச் சிக்கல்களிலிருந்து விடுபட்டுத் தனியாகச் செல்லும் நோக்கம் என்றும், விஞ்ஞானிகள் இதனைத் திசையறியும் திறனை இழந்த ஒரு ஆரோக்கியக் குறைபாடு என்றும் குறிப்பிட்டனர்.

தற்போது டிரம்ப் அந்தப் பென்குயினுடன் நடப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளதன் மூலம், உலகம் எத்தகைய எதிர்ப்பு தெரிவித்தாலும், மற்றவர்கள் வேறு திசையில் சென்றாலும், தான் கிரீன்லாந்தை வசப்படுத்தும் நோக்கத்தில் உறுதியாக இருப்பதைச் சுட்டிக்காட்ட முயல்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.