போலந்து நாட்டில் 15 வயது சிறுமி ஒருவரை அவரது தந்தையே சுமார் 27 ஆண்டுகள் ஒரு சிறிய அறைக்குள் பூட்டி வைத்திருந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது 42 வயதாகும் அந்தப் பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலந்தைச் சேர்ந்த மிரேலா என்ற சிறுமி, கடந்த 1998-ஆம் ஆண்டு தனது 15-வது வயதில் திடீரென மாயமானார். இதுகுறித்து உறவினர்களும் அண்டை வீட்டாரும் கேட்டபோது, மிரேலா வீட்டை விட்டு ஓடிவிட்டதாக அவரது தந்தை கூறி வந்துள்ளார். ஆனால், உண்மை நிலை முற்றிலும் வேறாக இருந்துள்ளது. 27 ஆண்டுகளாக அந்தப் பெண் தனது சொந்த வீட்டிலேயே ஒரு சிறிய அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம், மிரேலாவின் வீட்டிலிருந்து விசித்திரமான சத்தங்கள் வருவதாக அண்டை வீட்டார்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்றபோது, 82 வயதான முதியவர் ஒருவர் (மிரேலாவின் தந்தை) கதவைத் திறந்து, வீட்டில் அசம்பாவிதம் ஏதுமில்லை என கூறினார்.
இருப்பினும், சந்தேகத்தின் பேரில் போலீஸார் உள்ளே சென்று சோதனையிட்டபோது, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மிரேலாவைக் கண்டனர். மிரேலாவும் முதலில் பயத்தினால் எல்லாம் சரியாக இருப்பதாகவே கூறினார். ஆனால், அவரது கால்களில் இருந்த கடுமையான காயங்களையும், சீழ் பிடித்து அழுகிய நிலையில் இருந்த புண்களையும் கண்ட போலீஸார், உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் மிரேலாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று மிகவும் தீவிரமாக இருப்பதாகவும், இன்னும் சில நாட்கள் தாமதித்திருந்தால் அவர் உயிரிழந்திருப்பார் என்றும் தெரிவித்துள்ளனர். 27 ஆண்டுகளாக வெளி உலகையே பார்க்காததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
தன் மகளுக்கு எதற்காக இத்தகைய கொடூரமான தண்டனையை அந்தத் தந்தை வழங்கினார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 15 வயதில் சிறைப்பட்ட சிறுமி, 42 வயதில் ஒரு நடைபிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
