விலங்குகளும் மனிதர்களுக்கு இணையாகச் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவையா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில், தென்கொரிய விலங்கு பராமரிப்பு சாலை ஒன்றில் குட்டி நீர்நாய்கள் (Otter pups) அங்கு பணிபுரியும் முதியவருக்கு உதவி செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அங்கு, பார்வையாளர்கள் அனைவரும் சென்ற பிறகு இரவு நேரத்தில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. அப்போது அங்குள்ள தொட்டியில் இருக்கும் குட்டி நீர்நாய்கள், அங்கு சுத்தம் செய்துகொண்டிருக்கும் ஒரு முதியவருக்கு (தாத்தா) உதவியுள்ளன.
அந்த வீடியோவில், சிதறிக் கிடக்கும் தங்களது விளையாட்டுப் பொருட்களை ஒவ்வொன்றாக நீந்திக் கொண்டு வந்து, அந்த முதியவரிடம் கச்சிதமாக ஒப்படைக்கின்றன. ஒரு வேலையாள் போல மிகுந்த பொறுப்புடன் அவை பொருட்களைச் சேகரிக்கும் விதம் பார்ப்போரைக் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வேலை முடிந்ததும், அந்த முதியவர் குட்டி நீர்நாய்களின் உழைப்பைப் பாராட்டி, அவற்றுக்குப் பரிசாகப் பனிக்கட்டிகளை (Ice Cubes) வழங்குகிறார். அந்தப் பனிக்கட்டிகளைப் பெற்றுக்கொண்ட குட்டிகள், மிகுந்த உற்சாகத்துடன் அவற்றை வாயில் கவ்விக்கொண்டும், கடித்தும் விளையாடுகின்றன.
At an aquarium in South Korea, after closing time, some clever little otter pups help their grandpa tidy up their toys. As a reward, he gives them ice cubes pic.twitter.com/K0Fapkhjyu
— Nature Unedited (@NatureUnedited) April 18, 2026
இயற்கையிலேயே நீர்நாய்கள் மிகுந்த புத்திசாலித்தனம் மற்றும் சுறுசுறுப்பு கொண்ட விலங்குகள் ஆகும். ‘Nature Unedited’ என்ற எக்ஸ் (X) தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 32 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதனை விரும்பிப் (Like) பகிர்ந்துள்ளனர்.
“விலங்குகளின் அன்பு மற்றும் புத்திசாலித்தனத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை” எனப் பலரும் இந்த வீடியோவில் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
