மகள் திருமணத்திற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு கள்ளக்காதலியுடன் தப்பிய தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுரேந்திரன் (50) என்பவர் கொச்சி அருகே குன்னத்துநாடு கிராமம், வெங்கோலா பகுதியில் தனது மனைவி, மகன், மகளுடன் வசித்து வந்தார். வியாபாரியான இவரது மகளின் திருமணம் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற இருந்தது. இதற்காக வீட்டில் 15 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் வைத்திருந்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சுரேந்திரன் திடீரென காணாமல் போனார். அவருடன் வீட்டில் இருந்த நகைகளும், பணமும் காணாமல் போனது. மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகை, ரொக்கம் ஆகியவை மாயமானதை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து எர்ணாகுளம் புறநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சுரேந்திரனை தேடி போலீசார் விசாரணை நடத்தினர். அவரது செல்போன் பல நாட்கள் சுவிட்ச் ஆஃப் நிலையில் இருந்தது. பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென அவர் தனது மகளுக்கு வேறொரு எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு, “நான் நலமாக இருக்கிறேன், என்னை தேட வேண்டாம்” என்று கூறியதாக தகவல். மகள் அழுதபடியே திருமணத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டபோது அவர் சம்மதித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சைபர் கிரைம் பிரிவின் உதவியுடன் சுரேந்திரனின் இருப்பிடத்தை போலீசார் கண்டறிந்தனர். அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஒரு பெண்ணுடன் தங்கி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அந்த பெண் அவரது கள்ளக்காதலி என்பது உறுதியானது. அதையடுத்து போலீசார் சுரேந்திரனை கைது செய்து, அவரிடம் இருந்து 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.70 லட்சம் ரொக்கத்தை மீட்டனர். சுரேந்திரனுடன் இருந்த பெண்ணை எச்சரித்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் கேரளாவில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.