கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் இருந்து குதித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த சாஹர் (34) என்கிற இளைஞர், என்ஜினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்தியவர் என கூறப்படுகிறது. வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் மனநலப் பிரச்சினை ஏற்பட்டிருந்ததாகவும், இதற்காக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று காலை சாஹர் பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்திற்கு சென்றார். பின்னர் மூன்றாவது மாடிக்கு சென்று திடீரென அங்கிருந்து கீழே குதித்தார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினார். இதுபற்றி தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சாஹரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் எடுத்த இந்த துயரமான முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து, அங்கிருந்து அவசரமாக வெளியேறியதால் சிறிது பரபரப்பும் ஏற்பட்டது.