உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு மகன் தனது தாயையே சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கிஷோர் குப்தா என்ற அந்த இளைஞர், தனது தந்தை குடும்ப சொத்தை தனக்குத் தெரியாமல் விற்றதால் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இது குறித்து இன்று தனது தாய் மற்றும் தம்பியிடம் வீட்டில் வைத்து தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரம் தாங்காமல் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் மற்றும் தம்பியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அன்னையர் தினத்தில் தாயைக் கொன்ற இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ராஜ்கிஷோரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.