ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஐபிஎஸ் குடியிருப்பில் நடந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி வினய் ரஞ்சன் ராயின் மனைவி தனுஜா ரஞ்சன் ராய் கொலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த நேபாளத்தைச் சேர்ந்த பணிப்பெண் கல்பனாவை ஹைதராபாத் போலீசார் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் வைத்து திங்கள்கிழமை (மே 11) அதிரடியாகக் கைது செய்தனர்.
கடந்த மே 8-ம் தேதி அதிகாலை 2 மணியளவில், ஐபிஎஸ் அதிகாரி வினய் ரஞ்சன் ராய் வெளியூர் சென்றிருந்த சமயம் பார்த்து, வீட்டில் பணியிலிருந்த கல்பனா தனது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார். வீட்டில் தனியாக இருந்த தனுஜாவின் கை, கால்களைக் கட்டிப் போட்டு, கத்தாமல் இருப்பதற்காக வாயில் துணியைத் திணித்துள்ளனர். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட தனுஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
வீட்டிலிருந்த தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. அப்போது வீட்டின் முதல் தளத்தில் ராயின் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புனேவில் உள்ள தனது சகோதரி வீட்டில் கல்பனா பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார், அங்கு விரைந்து சென்று அவரைக் கைது செய்தனர். அவரை ஹைதராபாத் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், தலைமறைவாக உள்ள அவரது இரண்டு கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனர், “முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ராய், தனது தாயாரைப் பார்த்துக் கொள்வதற்காக எட்டு மாதங்களுக்கு முன்புதான் கல்பனாவை வேலைக்குச் சேர்த்துள்ளார். வீட்டு வேலைக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, குறிப்பாக நேபாளத்தைச் சேர்ந்தவர்களைப் பணியமர்த்தும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முறையான பின்னணி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
