
மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் லலிதா துபே. 80 வயது மூதாட்டி ஆன இவருக்கு அருண், அஜய் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மகன் அருணுடன் தான் லலிதா துபே வசித்து வருகிறார். இந்நிலையில் படுத்த படுக்கையாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் லலிதாவை விட்டுவிட்டு அருண் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார்.
பின்னர் அவர் இந்தூரில் வசிக்கும் தனது சகோதரர் அஜய்க்கு போன் செய்து அவர்களின் பயணம் குறித்து தெரிவித்தார். தனது தாயின் நலனில் அக்கறை கொண்ட அஜய், போபாலில் உள்ள ஒரு நண்பரிடம் தனது தாயை சென்று பார்த்து வருமாறு கூறியுள்ளார். அருணின் வீட்டிற்கு வந்த நண்பருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
லலிதா உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுத்த படுக்கையாக இருந்த அவரால் மற்றவர்களின் உதவி இல்லாமல் எழுந்து சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவும் முடியாத நிலையில் இருந்துள்ளார்.
24 மணி நேரமாக தண்ணீர் குடிக்காமல் சாப்பிடாமல் இருந்தது தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அஜய் தனது சகோதரர் அருண் மீது புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.