தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை விவகாரம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே பெரும் அரசியல் போராக உருவெடுத்துள்ளது. உரிமைத்தொகையை உயர்த்தி வழங்கப்போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், இது தேர்தலுக்கான திட்டம்’ என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

அதாவது முன்னதாக சமூக வலைதளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மகளிர் உரிமைத்தொகை என்பது இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுத்த உறுதிமொழி. தேர்தலைக் காரணம் காட்டி இதனை முடக்கப் பார்க்கிறார்கள். ஆனால், நமது திராவிட அரசு முந்திக்கொண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான முன்பணம் மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பு என மொத்தம் ரூ.5,000-த்தை இன்று காலை பயனாளிகளின் வங்கித் கணக்கில் வரவு வைத்துள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “திராவிட மாடல் 2.0 ஆட்சியில், தற்போது வழங்கப்படும் ரூ.1,000 உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்” என்ற புதிய வாக்குறுதியையும் அவர் அளித்துள்ளார்.

முதலமைச்சரின் புகாருக்குப் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “திட்டங்களை மத்திய அரசு முடக்கப் பார்க்கிறது என்று முதலமைச்சர் சொல்வதில் உண்மை ஏதுமில்லை. இது தர்மத்திற்கு எதிரானது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட இந்தத் திட்டம் முடக்கப்படவில்லை என்பதை அவர் உணர வேண்டும்,” என்று சாடியுள்ளார்.

திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த தமிழிசை, “ஒரு குடும்பத்தில் மதுப்பழக்கத்தால் மாதம் ரூ.6,000 வரை இழப்பு ஏற்படுகிறது. டாஸ்மாக் மூலம் ரூ.45,000 கோடி வருமானம் ஈட்டும் அரசு, குடும்பங்களைச் சீரழித்துவிட்டு உரிமைத்தொகை கொடுப்பது என்ன நியாயம்? பீகாரில் பூரண மதுவிலக்கு இருப்பதால் அங்கு பெண்களுக்குக் கொடுக்கும் பணம் குடும்பத்திற்குப் பயனாகிறது. ஆனால் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முத்ரா திட்டம் மூலம் ஒரு கோடிப் பேர் பயனடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், “டிஜிட்டல் இந்தியா திட்டத்தால்தான் இன்று விடிவதற்குள் பெண்களின் கணக்கில் பணத்தைச் செலுத்த முடிகிறது. இதற்காக முதலமைச்சர் பிரதமரைப் பாராட்ட வேண்டும். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அவர்கள் உரிமைத்தொகையை ரூ.2,000 ஆக உயர்த்துவோம் எனக் கூறிவிட்டார். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெண்களைச் சுயசார்பு உள்ளவர்களாக மாற்றும் நடவடிக்கைகளை எடுக்கும்,” எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.