மத்திய கிழக்கில் அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர், உலகளாவிய எரிசக்தி சந்தையைத் தலைகீழாக மாற்றியுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 110 டாலரைத் தாண்டியுள்ள நிலையில், ஆசிய நாடுகள் தங்களது எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து 20% வரை பாதிக்கப்படலாம் என்ற அச்சம் உலக நாடுகளை உலுக்கியுள்ளது.
இந்தியப் பெட்ரோலிய அமைச்சகம், சுத்திகரிப்பு ஆலைகளை வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி (LPG) சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் பிற வணிகப் பயன்பாடுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கத் தனிக்குழு அமைக்கப்பட்டு, விநியோகம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான், எரிபொருள் சிக்கனத்திற்காக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை, அரசு ஊழியர்களுக்கு 50% வேலை நேரம் குறைப்பு எனப் பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அரசு வாகனங்களுக்கான எரிபொருள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சீனா தனது கச்சா எண்ணெய் சேமிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், புதிய எரிபொருள் ஏற்றுமதி ஒப்பந்தங்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஜப்பான் தனது தேசிய எண்ணெய் இருப்பை (Strategic Reserves) எப்போது வேண்டுமானாலும் வெளியிடத் தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தென் கொரியா 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக எரிபொருள் விலைக்கு உச்சவரம்பு (Cap) விதித்துள்ளது. வியட்நாம் அரசு, எரிபொருளைச் சேமிக்கத் தனியார் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய (Work from Home) அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்தப் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
