மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல்முறையாகத் தனது பிடிவாதத்தைக் குறைத்துக்கொண்டு இறங்கி வந்துள்ளார்.

கடந்த 9 நாட்களாக ஈரானை அச்சுறுத்தி வந்த டிரம்ப், போரின் 10-வது நாளில் “ஈரானுடன் போர்நிறுத்தம் குறித்துப் பேசத் தயார்” எனச் சிக்னல் கொடுத்துள்ளார்.

பாக்ஸ் நியூஸ் (Fox News) நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஈரான் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஆர்வமாக உள்ளதாகவும், சில நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச தமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போர் நீண்டுகொண்டே போவது அமெரிக்காவிற்கும் பொருளாதார ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என அவரது ஆலோசகர்கள் கொடுத்த எச்சரிக்கையே டிரம்பின் இந்த மனமாற்றத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம், ஈரான் 11 அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியதாலேயே தங்களுக்குத் தாக்குதல் நடத்தும் சூழல் ஏற்பட்டதாக அவர் தனது முந்தைய அதிரடி நடவடிக்கைகளை நியாயப்படுத்தியுள்ளார்.

ரஷ்யா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் போர்நிறுத்தத்திற்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்தச் சாதகமான பதில் உலக நாடுகளிடையே மெல்லிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.