கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்ஜடே, புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய குடும்பத்தினர் என உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், நாட்டின் புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்க ஈரானின் நிபுணர்கள் சபை அவசரமாகக் கூடியது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டபடியே, மறைந்த தலைவர் காமேனியின் மகனான மோஜ்தபா காமேனியை புதிய உச்ச தலைவராக அந்தச் சபை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

இதுவரை எந்தப் பொறுப்பிலும் இல்லாத மோஜ்தபா, இப்போது ஈரானின் மிக உயரிய பொறுப்பை ஏற்றுள்ளார். இந்தத் தேர்வுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடனடியாகத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டின் புதிய தலைவருக்கு ரஷ்யாவின் முழுமையான ஆதரவு உண்டு என்று கூறிய அவர், ஈரான் அரசுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரானுக்குத் தொடர்ந்து ரஷ்யா துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.அதேவேளையில், ஈரானின் புதிய தலைவராக யார் பொறுப்பேற்றாலும், அவரையும் தாக்கி அழிப்போம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. சர்வதேச அளவில் இந்த மோதல் போக்கும், ஈரானின் புதிய தலைமை மாற்றமும் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.