யுத்தம் என்பது வெறும் எல்லைகளோடு முடிந்துவிடுவதில்லை; அதன் மிகப்பெரிய விலையை அப்பாவிப் பெண்களே சுமக்க வேண்டியிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ராணுவம், தனது வீரர்களின் பாலியல் தேவைகளுக்காக ‘கான்பர்ட் வுமன்’ (Comfort Women) என்ற பெயரில் ஒரு கொடூரமான முறையை உருவாக்கியிருந்தது. கொரியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் நல்ல வேலை தருவதாகக் கூறி கடத்தப்பட்டு, ராணுவ விபச்சார விடுதிகளில் (Comfort Stations) அடைக்கப்பட்டனர்.

அங்கு ஒரு பெண் நாளொன்றுக்கு டஜன் கணக்கான வீரர்களுடன் உறவு கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டாள்; தப்பிக்க முயன்றாலோ அல்லது வீரர்களைக் காதலித்தாலோ அவர்கள் மிகக் கொடூரமாகக் சித்திரவதை செய்யப்பட்டனர். ஒருவேளை கர்ப்பமானால் கூட, வீரர்களுக்குத் தடை வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்டு மீண்டும் அதே நரகத்தில் தள்ளப்பட்டனர்.

​ஜப்பான் மட்டுமல்லாது, நாஜி ஜெர்மனி, சோவியத் யூனியன் எனப் பல நாட்டு ராணுவங்களும் போரின் பெயரால் பெண்களின் மீது இத்தகைய பாலியல் வன்முறைகளை ஏவியுள்ளன. 1945-ல் பெர்லின் நகரை சோவியத் ராணுவம் கைப்பற்றிய போது லட்சக்கணக்கான ஜெர்மன் பெண்கள் சீரழிக்கப்பட்டதும், போஸ்னியா போரின் போது நடத்தப்பட்ட ‘பாலியல் வன்புணர்வு முகாம்களும்’ (Rape Camps) வரலாற்றின் மாறாத வடுக்கள்.

போர் முடிந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது மௌனத்தைக் கலைத்த போதுதான் இந்த உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. இன்றும் தென் கொரியாவில் இந்த பெண்களின் நினைவாகச் சிலைகள் அமைக்கப்பட்டு, போரின் கோரத்தையும் பெண்களின் கௌரவத்தையும் உலகிற்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.