பிரபலமான ‘ரிச் டாட் புவர் டாட்’ புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, 2026-ஆம் ஆண்டில் உலகப் பங்குச்சந்தையில் வரலாறு காணாத மிகப் பெரிய வீழ்ச்சி (Crash) ஏற்படும் என்று விடுத்துள்ள எச்சரிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது பணவீக்கத்தை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என அவர் கணித்துள்ளார்.

“2008-ல் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் அடிப்படை காரணங்கள் இன்னும் சரி செய்யப்படவில்லை, எனவே 2026-ல் வரப்போகும் சரிவு மிகவும் வேகமாகவும், பேரழிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்; இது கோடிக்கணக்கான ஓய்வூதியதாரர்களின் சேமிப்பை ஒரே நாளில் துடைத்து எறியும்” என அவர் ஆருடம் கூறியுள்ளார். ​இந்த மாபெரும் பொருளாதார அழிவிலிருந்து தப்பிக்க முதலீட்டாளர்களுக்கு அவர் ஒரு முக்கிய ஆலோசனையையும் வழங்கியுள்ளார்.

பங்குச்சந்தை சரிந்தாலும் தங்கம், பிட்காயின் மற்றும் குறிப்பாக வெள்ளி (Silver) ஆகியவற்றின் மதிப்பு பல மடங்கு உயரும் என்று அவர் கூறுகிறார். “உங்களிடம் வெறும் 10 டாலர் மட்டுமே மிச்சமிருந்தால் கூட, ஒரு வேளை சாப்பாட்டைத் தவிர்த்துவிட்டு அந்தப் பணத்தில் வெள்ளிக் காசுகளை வாங்கி முதலீடு செய்யுங்கள்” என அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். ‘பிளாக் ராக்’ போன்ற பெரிய நிறுவனங்களின் வீழ்ச்சி இந்த சரிவைத் தொடக்கி வைக்கும் என்று கியோசாகி கூறியிருப்பது, உலக நிதிச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.