புத்தாண்டு தினத்தில் கல்லூரி மாணவர் உள்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு கெங்குரெட்டி சுரங்கப்பாதை வழியாக வட மாநிலத்தைச் சேர்ந்த தீபக் என்பவர் மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தீபக் உயிரிழந்தார்.
இதேபோல சென்னை வடபழனியை சேர்ந்த சாருகேஷ் என்ற கல்லூரி மாணவர் கிழக்கு கடற்கரை சாலையில் நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடியுள்ளார். அதிகாலை அங்கிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது வெட்டுவாங்கேணி அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கண்டெய்னர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாருகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த நித்திஷ்(18) புத்தாண்டு முன்னிட்டு மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். நுழைவு 12 மணிக்கு அந்த பகுதியில் இருக்கும் சிவன் கோவில் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நித்திஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதே போல நாவலூர் சிப்காட் பழைய மாமல்லபுரம் சாலையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
