தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான (Electric Vehicles) 100 சதவீத வரி விலக்கு சலுகையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ளார்.

உலகளவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, மின்சார வாகனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. உற்பத்தியை ஊக்குவிக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

மின்சார வாகனங்களுக்கான பதிவு கட்டணக் குறைப்பு மற்றும் வரி விலக்கு சலுகைகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்தன. குறிப்பாக, 100 சதவீத வரி விலக்கு சலுகை இன்றுடன் (டிசம்பர் 31) நிறைவடைய இருந்தது. இதனைத் தொடர்ந்து, மக்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்தச் சலுகையை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி:
மின்சார வாகனங்களுக்கான 100% வரி விலக்கு சலுகை 2026 ஜனவரி 1 முதல் 2027 டிசம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும். மத்திய மோட்டார் வாகன விதிகளின் கீழ் வரும் அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும். சொந்தப் பயன்பாட்டிற்கான வாகனங்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலான போக்குவரத்து வாகனங்களுக்கும் இந்த வரி விலக்கு அளிக்கப்படும்.

இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் மின்சார வாகனங்களை வாங்குவோர் சாலை வரி (Road Tax) செலுத்துவதில் இருந்து முழுமையாக விலக்கு பெறுவார்கள். அரசின் இந்த ஊக்க நடவடிக்கை காரணமாக, தமிழகத்தில் மின்சார வாகன விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.