பீகாரில் சமீபத்தில் தொடங்கப்பட்ட புதிய ரயிலில் எடுக்கப்பட்ட ஒரு காணொளி தற்போது வைரலாகி வருகிறது. அதில், ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் நிலக்கடலை சாப்பிட்டுவிட்டு, அதன் தோல்களை ரயிலின் தரையிலேயே வீசி எறியும் காட்சிகள் பதிவாகியுள்ளன. புதிய ரயிலின் தூய்மையைச் சற்றும் பொருட்படுத்தாமல், பொது இடத்தைப் பாழ் செய்யும் இந்தச் செயல் பலரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. “அரசு புதிய வசதிகளைச் செய்து கொடுத்தாலும், அதை முறையாகப் பராமரிக்கும் பொறுப்பு மக்களிடம் இல்லையே” என்று நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

​இந்தக் காணொளியைப் பகிர்ந்த பலரும் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளனர். “ஏன் பீகார் அரசு பள்ளிகளிலேயே ‘Civic Sense’ எனப்படும் பொது ஒழுக்கத்தையும், சமூகப் பொறுப்பையும் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தக் கூடாது?” என்பதே அது. சிறு வயதிலிருந்தே தூய்மை மற்றும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே, வருங்காலத்திலாவது இதுபோன்ற அநாகரிகச் செயல்களைத் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.