சசிகலா புதிய கட்சி தொடங்கப்போவதாகவும் வரும் தேர்தலில் வேட்பாளர்களைக் களமிறக்க உள்ளதாகவும் வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி ஒரு புதிய கட்சியைப் பதிவு செய்யக் குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும் என்றும், எவ்வளவுதான் முயற்சித்தாலும் மூன்று மாதங்களுக்குள் அந்த நடைமுறைகளை முடிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதன் மூலம் சசிகலாவின் அரசியல் நகர்வுகளை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
மேலும் யாராவது உங்களிடம் வந்து உடனடியாகப் புதிய கட்சி ஆரம்பிக்கப்போவதாகச் சொன்னால் அதை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சசிகலாவின் அறிவிப்புகளை அவர் பகிரங்கமாகச் சாடியிருப்பது அமமுக மற்றும் சசிகலா ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
