தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் நாளுக்கு நாள் அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இணைந்ததாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் ஒரு புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
“நான் அதிமுக கூட்டணியில் இல்லை; பாஜகவோடு மட்டும்தான் கூட்டணியில் இருக்கிறேன்” என்று கூறி இபிஎஸ் முகாமுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதிமுக தலைவர்களுக்கும் தனக்கும் இடையே நிலவும் பனிப்போர் காரணமாக, தேசிய அளவில் பாஜகவை ஆதரித்தாலும், மாநிலத்தில் இபிஎஸ் தலைமையிலான அணியோடு கைகோர்க்கத் தான் தயாராக இல்லை என்பதை அவர் இதன் மூலம் தெள்ளத்தெளிவாக உணர்த்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் சரி, அதற்குப் பின் வரும் லோக்சபா தேர்தலிலும் சரி, தான் தனிப்பட்ட முறையில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் இந்தத் திடீர் பல்டி, என்டிஏ கூட்டணிக்குள் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது அதிமுக – பாஜக இடையிலான உறவிலும் விரிசலை உண்டாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
