தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அரசியலில் மௌனம் காப்பது வேலைக்கு ஆகாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்த நிலையில், அதற்கு தவெக தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய தவெக நிர்வாகி, “எங்களுடைய தலைவர் எப்போது பேச வேண்டும், எப்போது மௌனம் காக்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்; அதை அண்ணாமலை சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று குறிப்பிட்டார். மேலும், அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் அண்ணாமலை இருந்திருந்தால், அவர் இன்று வகிக்கும் இடத்திலேயே நீடித்திருப்பார் என்றும், தலைவரின் டயலாக் அண்ணாமலைக்கே பொருந்தும் என்றும் காரசாரமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் காவல்துறையினர் மிகச் சிறப்பாகவும், திட்டமிட்டபடியும் செயல்பட்டதாகப் பாராட்டினார். “அங்குள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பதட்டமான சூழலிலும் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்று முறையாகப் பயிற்சி பெற்றுச் செயல்பட்டனர்; அதைச் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்” என்று அவர் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் திறமையான காவலர்கள் இருந்தபோதிலும், அவர்களுக்குப் பணியாற்றுவதற்கான போதிய சுதந்திரம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறி என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரைப் புதுச்சேரி காவல்துறையினரைப் பார்த்துத் தமிழகக் காவல்துறை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.