திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“விஜய்க்காகப் போஸ்டர் ஒட்டியவர்களுக்கும், பாலாபிஷேகம் செய்த ரசிகர்களுக்கும் பதவி வழங்கப்படும் என்று கூறிவிட்டு, இப்போது ஆதவ் அர்ஜுனா போன்ற பணக்காரர்களுக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் சாடியுள்ளார்.

மேலும், “லாட்டரி மார்ட்டின் சிறையில் இருந்தபோது, அவரது மகளை ஏமாற்றித் திருமணம் செய்தவர் ஆதவ் அர்ஜுனா” என்றும், அவர் பல கட்சிகளுக்குத் தாவியவர் என்றும் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தை உருவாக்கியவர்களில் தானும் ஒருவன் என்று குறிப்பிட்ட செல்வகுமார், தற்போது தவெகவில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“உழைக்கும் ரசிகர்களுக்குப் பதவி கொடுக்காமல், பின்வாசல் வழியாக வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தவெக மாநாட்டிற்காகத் தொழிலையும், போனஸையும் விட்டுவிட்டு வந்த இளைஞர்களின் எதிர்காலத்தை புஸ்ஸி ஆனந்த் சீரழிக்கிறார்” என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், ரசிகர்களை உழைக்கச் சொல்லாமல் விஜய்யின் போட்டோவைப் பார்க்கச் சொல்வது சமூகத்திற்குச் செய்யும் துரோகம் என்றும் அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.