புதுச்சேரி காராமணி குப்பத்தைச் சேர்ந்த உலக அழகி சான் ரேச்சல் (சங்கர பிரியா), (25)தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக சிறுநீரக பாதிப்பால் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (ஜூலை 13) அதிகளவில் கிட்டத்தட்ட 50 ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சான் ரேச்சல், மிஸ் பாண்டிச்சேரி (2020-21), மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு (2019), மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் உள்ளிட்ட பல பட்டங்களை வென்று, கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டம் பெற்றவர். நிறத்தைப் பொருட்படுத்தாமல் தனது திறமை மற்றும் உழைப்பின் மூலம் மாடலிங் துறையில் சாதனை படைத்தவர். அவரது இளமையான மரணம், இளைய தலைமுறையை பெரிதும் உருக்கும் விதமாக இருக்கிறது.

தற்கொலைக்கு காரணமாக, தொடர்ந்த உடல்நலக்குறைவு, வேலை மற்றும் நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட நட்டம், மனவேதனை ஆகியவை இருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது புதுச்சேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரின் மறைவு மீது நெருங்கியவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளனர்.