பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரின்ஸ் ஆண்ட்ரூ மீது, மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இணைந்து பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகப் புதிய புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே வர்ஜீனியா என்ற பெண் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது பெண் ஒருவர் முன்வந்து, 2010-ல் தன்னை எப்ஸ்டீன் பிரிட்டனுக்கு அழைத்துச் சென்று ஆண்ட்ரூவுடன் உறவு கொள்ள வைத்ததாகக் கூறியுள்ளார். அந்தப் பெண் ஆண்ட்ரூவின் அரச இல்லத்திற்குச் சென்றதாகவும், அதன்பின் பக்கிங்ஹாம் அரண்மனையைச் சுற்றிக் காட்டி அவருக்கு தேநீர் வழங்கப்பட்டதாகவும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள ஆவணங்களில், ஆண்ட்ரூ ஒரு பெண்ணின் மீது மண்டியிட்டு அமர்ந்திருப்பது போன்ற சர்ச்சைக்குரிய புகைப்படமும் இடம் பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஜப்பான் பயணத்தில் இருந்த பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கே தனது முன்னுரிமை என்றும், யாரிடம் தகவல் இருந்தாலும் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கிரிஸ்பாகப் பதிலளித்துள்ளார்.

இது ஆண்ட்ரூவின் தனிப்பட்ட விஷயம் என்றாலும், அவர் சாட்சி சொல்லத் தயாராக இருக்க வேண்டும் என்பதே பிரதமரின் கருத்தாக உள்ளது. இதற்கிடையில், ஆண்ட்ரூ தரப்பில் இருந்து இன்னும் முறையான பதில் எதுவும் வரவில்லை. ஒரு காலத்தில் உலகமே வியந்து பார்த்த அரச குடும்பத்தின் கௌரவம், இதுபோன்ற பாலியல் புகார்களால் இப்போது சந்தி சிரிக்கத் தொடங்கியுள்ளது நெட்டிசன்களிடையே காரசாரமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.