அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான கேப்டன் கஸ் சான்பிலிப்போ மற்றும் அவரது குழுவினர் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடும் குளிரும், கடல் நீர் உறைந்துபோகும் நிலையில் இருந்த சூழலும் இந்த விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

கடலோரக் காவல்படையினர் சுமார் 1000 சதுர மைல் பரப்பளவில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தியும், ஒருவரின் உடல் மட்டுமே மீட்கப்பட்டது. மற்றவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தத் துயரச் சம்பவத்திற்கு முன்னதாக கேப்டன் தனது நண்பரிடம், “குளிர் தாங்க முடியவில்லை, நான் வேலையை விட்டுவிடப் போகிறேன்” என்று உருக்கமாகப் பேசிய ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேப்டன் சான்பிலிப்போ மற்றும் அவரது குழுவினர் 2012-ஆம் ஆண்டு ஹிஸ்டரி சேனலில் ஒளிபரப்பான ‘நார்-ஈஸ்டர் மென்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்கள். ஆபத்தான கடல் சூழலில் மீன்பிடிக்கும் இவர்களது வீரதீரச் செயல்கள் உலகளவில் பலரால் ரசிக்கப்பட்டது.

படகிலிருந்து எந்தவித அபாய சிக்னலும் வராத நிலையில், ரேடியோ பீக்கன் எச்சரிக்கையைத் தொடர்ந்து தேடுதல் பணி தொடங்கப்பட்டது. தற்போது தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் க்ளௌசெஸ்டர்  மீனவ சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.