
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். அதில் இவர்கள் அமலுக்கு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வேண்டியும், மத்திய அரசை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்கள் நாகர்கோவில் கோர்ட்டில் நேற்று காலை ஒன்று கூடினர். இதைத்தொடர்ந்து நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக கூறியிருந்தனர்.
இதற்காக அவர்கள் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால் வக்கீல்கள் வேப்பமூடு வழியாக அண்ணா பஸ் நிலையத்தை நோக்கி தங்கள் போராட்டத்தை மேற்கொண்டனர். இதற்கிடையில் காவல்துறையினர் பேரிகார்டுகள் வைத்து தடுத்து நிறுத்த முயன்ற போது வக்கீல்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இக்காரணத்தால் 300-க்கும் மேற்பட்ட வக்கீல்களை காவல்துறையினர் கைது செய்தனர்.